SLW vs NZW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கொழும்பிவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. கேப்டன் அத்தபத்து, விஷ்மி, கவிஷா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஹர்ஷித்த 23 ரன்களையு, ஹாஷினி பெரேரே 33 ரன்களையும், நிலாக்ஷி டி சில்வா 22 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லியா தஹுஹு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பெர்னடைன் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். இதில் பெர்னடைன் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த சூஸி பேட்ஸ் 52 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மெலி கெர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கொழும்பிவில் ஜீலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.