ஆசிய கோப்பை 2023: கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை!
இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கீடு ஏற்பட்டது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் மழை பெய்ததால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது.
இதன்பின் இந்திய அணியின் விராட் கோலி - கேஎல் ராகுல் இருவரும் பேட்டிங்கை தொடர்ந்தனர். மீண்டும் மழை வந்தால் டிஎல்எஸ் விதிமுறை அமலுக்கு வர வாய்ப்பிருப்பதால், கேஎல் ராகுல் அதிரடியாக ஆட தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக விராட் கோலி அடக்கி வாசித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 33 ஓவர்கள் முடிவிலேயே 200 ரன்களை கடந்தது.
இதில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 100 பந்துகளில் சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய விராட் கோலி 84 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்களை குவித்தது. இதில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனை ஒன்றையும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக படைத்திருக்கிறது.
இன்று விராட் கோலி மற்றும் கேஎல்ராகுல் 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாக பதிவாகி இருக்கிறது. இவர்கள் பாகிஸ்தான் ஜோடி ஒன்றின் சாதனையை முறியடித்து இருக்கிறார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக ஜாம்ஷத் மற்றும் முகமது ஹபீஸ் இருவரும் சதம் அடித்ததோடு 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
ஆசியக்கோப்பை வரலாற்றில் ஒரு ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். மேலும் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் ஆறு விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் சேர்த்தது. இதே போட்டியில்தான் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருந்தார். தற்பொழுது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் ஜோடி படைத்திருந்த சாதனையை, அதே அணிக்கு எதிராக இந்திய ஜோடியான விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் உடைத்து படைத்திருக்கிறார்கள்.