AUS vs PAK, 2nd Test: தடுமாறிய ஆஸ்திரேலியா; சரிவிலிருந்து மீட்ட மார்ஷ், ஸ்மித்!

Updated: Thu, Dec 28 2023 13:35 IST
AUS vs PAK, 2nd Test: தடுமாறிய ஆஸ்திரேலியா; சரிவிலிருந்து மீட்ட மார்ஷ், ஸ்மித்! (Image Source: Google)

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது  டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் 62 ரன்களையும், ஷான் மசூத் 54 ரன்களையும் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் , சாத் ஷஹீல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. 

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஸ்வான் 29 ரன்களுடனும், அமிர் ஜமால் 2 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இத்ல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் அமிர் ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 6 ரன்களில், டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றியும் என மிர் ஹம்ஸா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதானால் ஆஸ்திரேலிய அணி 16 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் - மிட்செல் மார்ஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதில் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அரைசதம் அடித்தார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, 50 ரன்களில் ஸ்மித்தும் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் மிர் ஹம்சா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 241 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை