IND vs SA: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. சொந்த மண்ணிலேயே நடைபெறும் இந்த போட்டி வரும் ஜூன் 9ம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19ம் தேதி முடிவடைகிறது.
இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல், துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணி முழுவதும் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு உறுதுணையாக சீனியர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆனால் இதில் இருந்து ப்ளேயிங் 11-ஐ தேர்ந்தெடுப்பது தான் சிரமமான விஷயம். ஏனென்றால் இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் என 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.
ஓப்பனிங்கிற்கு வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட் உள்ளனர். இவர்கள் தவிர்த்து மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கும் இருக்கிறார். எனவே ப்ளேயிங் 11 எப்படி அமையப்போகிறது என்ற குழப்பம் உள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதில் அளித்துள்ளார். அனைவரும் இஷான் கிஷான் ஓப்பனிங் ஆடுவார் என நினைக்கலாம். ஆனால் கீப்பர்கள் அதிகமாக இருப்பதால், ருதுராஜ் கெயிவாட்டிற்கு தான் கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
மிடில் ஆர்டரை பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் ஹூடாவிற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. இதே போல துணைக்கேப்டன் என்ற முறையில் ரிஷப் பந்த் மற்றும் ஆல்ரவுண்டர் என்ற முறையில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுவிடுவார்கள். இதனால் ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டர் உறுதியாகிவிடும். எந்த பிரச்சினையும் இருக்காது. தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இருக்காது எனக்கூறியுள்ளார்.