இந்த பந்துவீச்சாளர் அதிக தொக்கைக்கு ஏலம் போவார் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவில் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ள 15ஆவது ஐபிஎல் தொடருக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்று அதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து அவர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கும் வேளையில் அதனை தொடர்ந்து தற்போது மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போகும் இந்திய பவுலர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியில் விளையாடும் பல பந்துவீச்சாளர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போவார்கள் என்றாலும் இதில் முதன்மையாக தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று தோன்றுகிறது.
ஏனெனில் தீபக் சாகர் புதிய பந்தில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனுடையவர். மற்ற இந்திய பந்துவீச்சாளர்களில் இல்லாத அளவிற்கு அவரிடம் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் திறமை இருக்கிறது. இதன் காரணமாக நிச்சயம் தீபக் சாஹர் இந்த ஏலத்தில் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போவார்.
எப்போதுமே ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை துவக்க ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தும் பந்துவீச்சாளர் இருந்தால் நிச்சயம் எதிரணியின் முதுகெலும்பை துவக்கத்திலேயே முறித்துவிட முடியும்.
அந்த வகையில் தீபக் சாஹர் எதிரணியின் முதுகெலும்பை முறிக்க கூடியவர் என்பதனால் அவர் நிச்சயம் அதிக தொகைக்கு ஏலம் போவார்” என்று தெரிவித்துள்ளார்.