ஐபிஎல் ஏலத்தில் இந்த வீரர் 20 கோடிக்கு ஏலம் போவார் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரில் இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் கூடுதலாக பங்கேற்கவுள்ளன. இதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
அனைத்து அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகிய டேவிட் வார்னர் உட்பட பல பெரிய வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் இடம்பெறவுள்ளதால், இந்த மெகா ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலத்தில் எந்த வீரர் அதிக தொகைக்கு விலைபோவார் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, “மெகா ஏலத்தில் கேஎல் ராகுல் தான் அதிக தொகைக்கு விலைபோகும் வீரராக இருப்பார். வீரர்களுக்கு ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றால், கேஎல் ராகுல் கண்டிப்பாக ரூ.20 கோடிக்கு மேலான பெரிய தொகைக்கு விலைபோவார்” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கேஎல் ராகுல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவருவதுடன், கேப்டன்சியும் நன்றாக செய்துவருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியை கடந்த சில சீசன்களாக ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனி ஒருவனாக தூக்கி நிறுத்திவருகிறார். இந்தியாவிற்காகவும் அதிரடியாக ஆடிவரும் ராகுல், தற்போது செம ஃபார்மில் ஆடிவருகிறார்.
கடந்த சீசனில் 626 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்டை விட வெறும் 9 ரன்களே ராகுல் குறைவாக அடித்திருந்தார். ருதுராஜ் சார்ந்திருந்த சிஎஸ்கே அணி ஃபைனல் வரை ஆடியது. ஆனால் ராகுல் ஆடிய பஞ்சாப் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
Also Read: T20 World Cup 2021
அதனால் ருதுராஜை விட 2 போட்டிகள் குறைவாக ஆடினார் ராகுல். அப்படியிருந்தும், ருதுராஜை விட வெறும் 9 ரன்கள் மட்டுமே குறைவாக அடித்திருந்தார் ராகுல். ஒருவேளை பஞ்சாப் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றிருந்தால், கடந்த சீசனின் அதிகபட்ச ரன் ஸ்கோரராக ராகுல் தான் இருந்திருப்பார்.