டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு இடமில்லை - ஆகாஷ் சோப்ரா!
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இந்திய அணி தேர்வு மிகச்சவாலானதாக இருக்கும்.
இந்திய அணியின் ஓபனிங் காம்பினேஷன், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் என அனைத்துமே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒரேயொரு இடத்திற்கான போட்டி மட்டுமே நிலவுகிறது. சூர்யகுமார் யாதவ் - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்கும் 4ஆம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது. அதேபோல, ரிஷப் பந்த் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவருவதால் விக்கெட் கீப்பர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது.
ரோஹித் - ராகுல் தொடக்க வீரராக இறங்குவார்கள். ரிசர்வ் தொடக்க வீரராக இஷான் கிஷன் இருப்பார். கோலியே கூட ஓபனிங்கில் இறங்க வாய்ப்புள்ளது என்று பேசப்படுகிறது. எனவே இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட், சீனியர் வீரரான ஷிகர் தவான் ஆகியோருக்கெல்லாம் இந்திய அணியில் இடம் கிடைக்கவே வாய்ப்பில்லை.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்தது. 5 போட்டிகளிலும் பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு அரைசதத்துடன்(57) மொத்தமாகவே 96 ரன்கள் மட்டுமே அடித்தார். டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஓபனிங்கில் பேட்டிங் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டார் ருதுராஜ். ஆனால் இந்திய அணியில் இடத்தை பிடிக்க அவரது போட்டியாளராக திகழும் இஷான் கிஷன் அபாரமாக பேட்டிங் ஆடி அசத்தினார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “தொடக்க வீரர்களுக்கு நிறைய போட்டி நிலவுகிறது. ஏகப்பட்ட தொடக்க வீரர்கள் அணியில் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
விராட் கோலி ஐபிஎல்லில் ஓபனிங்கில் இறங்கியதால் இந்திய அணியிலும் ஓபனிங்கில் இறங்க வாய்ப்புள்ளதாக சிலர் பார்க்கின்றனர். ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷன் ஆகியோரும் இருக்கின்றனர். எனவே ருதுராஜுக்கு அணியில் இடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.