ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக இவரை களமிறக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
டேவிட் வார்னர், ரிஷித் கான் போன்ற முக்கிய தலைகளை கழற்றிவிட்டுள்ள சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர்கள் வாங்கி கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கியுள்ளது.
அப்துல் சமாத், உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி, பிரியம் கார்க், வாஷிங்டன் சுந்தர், கார்த்திக் தியாகி என இளம் வீரர்களை குவித்துள்ளனர். அணியின் வெற்றிகரமான ஓபனராக இருந்த வார்னரை கழற்றிவிட்டுள்ளதால், அந்த அணியில் ஓபனர்களாக கேன் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிறந்த துவக்கம் தரவில்லை. குறிப்பாக அபிஷேக் ஷர்மா 19 பந்துகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால், ஓபனரை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சன் ரைசர்ஸ் அணியும் இதுகுறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, யார் ஓபனராக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கினார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘மற்றவர்கள் யோசிக்காத ஒரு ஆப்ஷனை தருகிறேன். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டையுமே வாஷிங்டன் சுந்தரை வைத்து துவங்கலாம் என நினைக்கிறேன். ஓபனிங் களமிறக்கப்பட்டால் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இவருடன் ராகுல் திரிபாதியை ஓபனராக களமிறக்க வேண்டும். வாஷிங்டன் சுந்தரை இன்னமும் 6,7,8ஆகிய இடங்களில் களமிறக்கி, வீண்டித்துவிடக் கூடாது’’ எனத் தெரிவித்தார்.
சோப்ரா கூறியது போலவே, கடந்த போட்டியில் சுந்தர் 14 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்து அசத்தினார். பவர் பிளேவில் களமிறக்கப்பட்டிருந்தால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் எனக் கருதப்படுகிறது. இவர் உள்ளூர் தொடர்களில் ஓபனராக களமிறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது