எஸ்ஏ20 லீக் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் - ஏபிடி வில்லிர்ஸ்!

Updated: Fri, Jan 27 2023 13:16 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் வெற்றியை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் டி20 லீக் தொடர்கள் இந்தாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் தென் ஆப்பிரிகாவில் நடைபெற்றுவம் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், அத்தொடரின் அணிகளை வாங்கியுள்ளது தான். அதுமட்டுமின்றி நட்சத்திர வீரர்கள் மற்றும் உள்ளூர் வீரர்கள் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது திறமைகளை அங்கு நிரூபித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்ஏ20 லீக் தொடரானது இளைஞர்கள் திறனை வளர்க்க உதவியாக இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ‘மிஸ்டர் 360’ ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "உலகின் சில சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இளைஞர்கள் நேரத்தை செலவிடுவதன் மதிப்பை விளக்குவது கடினம்.2008ல் எனது முதல் ஐபிஎல் போட்டியில் எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது. கிளென் மெக்ராத், டான் வெட்டோரி, ஷோயப் மாலிக், சேவாக் போன்றவர்களுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமில் நான் இருந்தேன்.

அது எனது ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. 2008 முதல் எனது ஆட்டம் வளர்ந்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள், நான் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றேன். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனுபவமிக்க வீரர்களுடன் நேரத்தை செலவிட்டதன் மூலம் என்னால் அதனை செய்ய முடிந்தது.

அதிலும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜோர்டன் ஹெர்மன் என்னை கவர்ந்துவிட்டார். உண்மையாகச் சொல்வதானால், போட்டிக்கு முன்பு அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் ஒருமுறை அவருடைய பெயரைக் கேட்டேன், பின்னர் அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்தேன், நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

நான் இந்த பேட்டர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன். உண்மையில் எனக்கு அது சம்பந்தமாக மிகுந்த ஆர்வம் உண்டு. நீங்கள் ஒரு வீரராக உருவாக வேண்டும். நீங்கள் தேக்கமடைந்தால், நீங்கள் விளையாட்டை ரசிக்காமல் இருப்பீர்கள். தொடர்ந்து சோதனைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் என்னை புத்துணர்ச்சியாக வைத்திருந்தது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை