அபுதாபி டி10 லீக் : ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் அபுதாபி டி10 லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோர்டன் காக்ஸ் ஒருமுறையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கிறிஸ் லின் ரன்கள் ஏதுமின்றியும், குசால் மெண்டிஸ் 19 ரன்களுக்கும், டேவிட் மில்லர், டேனியல் சம்ஸ் ஆகியோரும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோர்டன் காக்ஸ் 36 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 90 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய தசுன் ஷனகா 25 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பங்களா டைகர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்கான் அணிக்கு டாம் கொஹ்லர் - ஆண்ட்ரே ஃபிளட்செர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கொஹ்லர் 8 ரன்களுக்கும், ஃபிளட்செர் 17 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் வழக்கத்திற்கு மாறாக 17 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுக்க, மறுபக்கம் அணியின் வெற்றிக்காக போராடிய ஃபாஃபியன் ஆலன் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் 10 ஓவர்கள் முடிவில் டெக்கான் அணியால் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன்மூலம் பங்களா டைகர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து பங்களா அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜோர்டன் காக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.