ஒரே ஓவரில் 31 ரன்கள்; மோசமான சாதனை பட்டியலில் ஆதில் ரஷித்!
பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையிலும், அந்த அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஆதில் ரஷித் மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் மொத்தமாக 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த நிலையில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக ரஷித் வீசிய 19ஆவது ஓவரில் மட்டும் மொத்தமாக 5 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்களைக் கொடுத்திருந்தார்.
இதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தரபில் ஒரு ஓவரில் அதிக ரன்களைக் கொடுத்த இரண்டாவது வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு ஸ்டீவர்ட் பிராட் இந்திய ஆணிக்கு எதிராக 36 ரன்களைக் கொடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்சமயம் ஆதில் ரஷித் 31 ரன்களைக் கொடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்ந்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும், ஷாய் ஹோப் 49 ரன்களையும், ரோவ்மேன் பவல் 34 ரன்களையும் மற்றும் ஜேசன் ஹோல்டர் 29 ரன்களைச் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 47 ரன்களையும், ஹாரி புரூக் 34 ரன்களையும், பென் டக்கெட் 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் பான்டன் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 197 ரன்கள் என்ற இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.