AFG vs BAN, 3rd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Tue, Nov 12 2024 08:16 IST
Image Source: Google

அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இப்போட்டிக்கான வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் காரணமாக விளையாடாத நிலையில், மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து பேட்டிங் செய்ய காளமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமிய சர்க்கார் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து தன்ஸித் ஹசன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸகிர் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

இதனால் வங்கதேச அணி 72 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 145 ரன்களை எட்டியது. பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 66 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய ஜக்கார் அலி, நசும் அஹ்மத் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மஹ்முதுல்லா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய செதிகுல்லா அடல் 14 ரன்களுக்கும், ரஹ்மத் ஷா 8 ரன்களுக்கும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் குர்பாஸுடன் இணைந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்த்தொடங்கியதுடன், வெற்றியும் உறுதியானது. 

இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்பதின் நைப் ஒரு ரன்னில் நடையைக் கட்டிய நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 70 ரன்களையும், முகமது நபி 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தானிஸ் தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை