ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளில் முதல் போட்டியில் அயர்லாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், செதிகுல்லா அடல் 19 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து எமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய வீரர்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 ரன்களுக்கும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது இஷாக் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனுபவ வீரர் முகமது நபி வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

ஆனால் அடுத்து களமிறங்கிய ரஷித் கான் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 72 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் தொடரை வெல்லலாம் என்ற உத்வேகத்துடன் அயர்லாந்து பேட்டிங் செய்யவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News