அண்டர் 19 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Fri, Jan 28 2022 12:28 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குரூப் சி பிரிவில் 2ஆம் இடம் பிடித்த ஆஃப்கானிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  அப்துல் ஹாதி 37 ரன்னும், நூர் அகமது 30 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் வினுஜா ரான்பால் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆஃப்கானிஸ்தான் அணியினரின் அசத்தலான பீல்டிங்கில் இலங்கை அணி சிக்கியது.

இலங்கை அணியில் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார்.  45ஆவது ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்த ஆட்டத்தில் 4 பேர் ரன் அவுட்டாகினர். 

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் 4 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை