ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்த ஆஃப்கானிஸ்தான்!
நடப்பு ஆசிய கோப்பை மழைக்கொட்டி தீர்க்கும் இலங்கையில் நடப்பதால் ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ரசிகர்கள் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வருகிறார்கள். இன்னொரு புறத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிக்கொண்ட முதல் சுற்றின் கடைசிப் போட்டி தற்பொழுது மிகப்பெரிய சர்ச்சையான விஷயமாக மாறி வருகிறது.
அந்தப் போட்டியில் குறிப்பிட்ட ரன் ரேட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தினால் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி இருந்தது. இலங்கை அணி குறிப்பிட்ட ரன் ரேட் வித்தியாசத்தில் தோற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களுக்கு 291 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி அந்த இலக்கை அதாவது 292 ரன்களை 37.1 ஓவரில் எட்டினால், ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று நுழையலாம் என்று நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 37.1 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 289 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழந்திருந்தது. இத்தோடு அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது என்பதால், அடுத்து வந்த பேட்ஸ்மேன் பந்தை அடிக்க நினைக்கவில்லை.
மேலும் அதற்கு முந்தைய பந்தில் ஆட்டம் இழந்த முஜீப் மூன்று ரன்கள் எடுத்து இலக்கை அடையவே முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். ஆனால் 37.2 ஓவரில் 293 ரன்கள், அதற்கு அடுத்த பந்தில் 294, அதற்கு அடுத்த பந்தில் 295 எனவும், 38ஆவது ஓவர் முடியும் பொழுது 298 ரன் இருந்தால் கூட வெற்றி என, பின் ரன் ரேட் பலரால் கணிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்வாகம் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானது.
அவர்கள் தரப்பில் தங்களிடம் இது குறித்து எதுவுமே நடுவர்கள் கூறவில்லை என்று சொல்லப்பட்டது. தற்பொழுது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்திருக்கிறது. அவர்கள் இப்படியான ஒரு அஜாக்கிரதையான தவறு எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நடந்து முடிந்த போட்டி அத்தோடு முடிந்ததுதான். இதனால் ஆசியக் கோப்பையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.