பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!

Updated: Wed, Aug 10 2022 21:47 IST
Image Source: Google

கடந்த 2000ஆம் ஆண்டில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்த சில வருடங்களிலேயே இந்தியாவை வெற்றி நடைபோடும் அணியாக மாற்றினார். அவருக்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து 2007, 2011 ஆகிய வருடங்களில் உலக கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார். 

அத்துடன் தாம் உருவாக்கிய ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், தவான் உள்ளிட்ட வீரர்களை வைத்து 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் இப்போதைய இந்திய அணியில் விளையாடும் 70 சதவித வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பளித்து வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்தார்.

அதன்பின் 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் உருவாவதற்கான வாய்ப்புகளையும் ஆதரவையும் கொடுத்து விடைபெற்றார். ஆனால் அவருக்கு பின் தற்போது முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையில் நிறைய குளறுபடிகள் நடைபெறுவதாக அனைவரும் கருதுகின்றனர். ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் இதுவரை 50% க்கும் மேற்பட்ட தொடர்களில் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுப்பதிலேயே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

அவர் தொடர்ச்சியாக விளையாட முடியாத காரணத்தால் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஷிகர் தவான் இந்த வருடம் 7 மாதங்களில் வரலாற்றிலேயே முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்கள் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். இப்படி மாதத்திற்கு ஒரு கேப்டன்கள் வழி நடத்தினால் எப்படி ஒருவர் தலைமையில் அனைவரும் இணைந்து உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்ல முடியும் என்பதே பலரின் கேள்வியாகவும் கவலையாகவும் இருக்கிறது.

இதுபோக தரமான வீரர்களை கண்டறியும் சோதனை என்ற பெயரில் இந்த 7 மாதங்களில் இந்திய அணியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய சூர்யகுமார் யாதவை ஓப்பனிங்கில் களமிறக்குவது, சிறப்பாக செயல்படும் வீரர்களை அடுத்த தொடரிலேயே பெஞ்சில் அமர வைப்பது போன்ற முடிவுகள் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் கேள்விகளை எழுப்புகிறது.

இந்நிலையில் இதுபோன்ற கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இவ்வாறு நடைபெறுவது அடுத்த தலைமுறை வீரர்களையும் மற்றும் கேப்டன்களையும் அடையாளம் காட்டி வளமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா,“நாம் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பதால் காயங்களையும் பணிச் சுமையையும் நிர்வகிப்பதற்காக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இது பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்றி சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்படும் அளவுக்கு தயார்படுத்த உதவுகிறது.

நாங்கள் வலுவான பெஞ்சை உருவாக்கி அதன் வாயிலாக வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட்டை வளமாக அமைக்க விரும்புகிறோம். இதன் பின்பும் நான் நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்க எதுவுமில்லை. நாங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக முன்னேற முயற்சிக்கிறோம். ஒரு தொடரில் வெற்றி தோல்விக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

மாறாக ஒரு சிறந்த அணியாக முன்னேறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒவ்வொரு தனி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைப்பது அவசியமாகும். அதற்காக அணி நிர்வாகம் என்ன திட்டங்களை வகுக்கிறதோ அதில் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து முன்னோக்கி நடக்க உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை