SMAT 2024: ரஹானே அதிரடியில் விதர்பாவை வீழ்த்தியது மும்பை!
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆலூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா டைடே மற்றும் கருண் நாயர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில் கருண் நாயர் 26 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய பார்த் ரேகாடே ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் அதர்வா டைடேவுடன் இணைந்த அபூர்வ் வான்கடே இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 66 ரன்களைச் சேர்த்த நிலையில் அதர்வா டைடே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களை எடுத்த கையோடு வான்கடேவும் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் தூபே 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ், அதர்வா அன்கோலேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா மற்றும் அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 49 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அதிரடியாக விளியாடி வந்த அஜிங்கியா ரஹானே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கியா ரஹானேவும் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 84 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஷிவம் தூபே - சூர்யன்ஷ் ஷெட்ஜ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 37 ரனகளையும், சூர்யன்ஷ் ஷெட்ஜ் 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் மும்பை அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நட்ப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கும் மும்பை அணி தகுதிபெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே ஆட்டநாயகன் விருதை வென்றார்.