AUS vs SA, 2nd Test: முதல் சதத்தில் சாதனைப் படைத்த அலெக்ஸ் கேரி!
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இரு நாள்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2ஆவது நாளில், 100-வது டெஸ்டை விளையாடும் டேவிட் வார்னர், இரட்டைச் சதமெடுத்து அசத்தினார். ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 2ஆவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 91 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. ஹெட் 48, கேரி 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்று சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி 111 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். இது அவருடைய முதல் டெஸ்ட் சதம். மீண்டும் விளையாட வந்த வார்னர் ரன் எதுவும் சேர்க்கமல் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹெட் 51 ரன்களும் கிரீன் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் எடுத்தார்கள்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெடுகளும் எடுத்தார்கள். இதன்மூலம் 386 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
மேலும் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சதமடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் எனும் சாதனையை அலெக்ஸ் கேரி படைத்துள்ளார். இதற்குமுன்னதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் மெல்போர்னில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.