இந்தியாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ரோஹித் மட்டும் தான் காரணம் - சுனில் கவாஸ்கர்!

Updated: Tue, Oct 08 2024 10:37 IST
Image Source: Google

கான்பூரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. 

அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதுடன் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சதம் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றார்.

அத்துடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணி எனும் சாதனையையும் இந்திய அணி படைத்து அசத்தியுள்ளது. இங்கிலாந்தை போலவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையை பின் பற்றி இந்திய அண்ணி இந்த வெற்றியைப் பெற்றதுடன், கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா அதிரடியாக விளையாடும் இந்த அணுகுமுறைக்கு ‘கம்பால்’ என்ற அடைமொழியையும் முன்னாள் வீரர்கள் வழங்கினர்.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த அதிரடியான அணுகுமுறைக்கு காரணம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்றும், அதனால் இதற்கான முழு பெருமையும் ரோஹித் சர்மாவிற்கு மட்டும் தான் சேரும் என்றும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் இந்த அதிரடியான அணுகுமுறையை சில காம்பால் என்று அழைத்து வருகின்றனர்.

 

ஏனெனில் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுபெற்ற பிறகு இதுபோல் அதிரடியாக விளையாடுவதால் இந்த பெயர் வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் கடந்த சில வருடங்களாகவே நம்முடைய இந்திய அணி அதிரடியாக விளையாடுவதை பார்த்து வருகிறோம். கம்பீர் இரண்டு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக இருந்து வருகிறார். எனவே இந்த அணுகுமுறைக்கு அவர்தான் காரணம் என்று கூறுவது சரியாக இருக்காது. 

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் உண்மையில் மெக்கல்லம் போல கம்பீர் ஒன்றும் இந்திய அணிக்காக இதுபோல் அதிரடியான பேட்டிங்கை விளையாடியது கிடையாது. ரோஹித் சர்மா மட்டுமே தொடர்ந்து இதுபோல் அதிரடியாக விளையாடி வருகிறார். எனவே இந்த அணுகுமுறைக்கான முழு பாராட்டுகளும் ரோஹித் சர்மாவை மட்டுமே சேரும். அதனால் இந்த அணுகுமுறைக்கு ‘பாஸ்பால்’ என்ற பெயரை சூட்டுவதே சரியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை