டி20 பிளாஸ்ட்: சாம் கரண் அதிரடியில் சர்ரே அபார வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சர்ரே - ஹாம்ஷையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாம்ஷையர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சர்ரே அணியில் ஜேசன் ராய் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதையடுத்து வில் ஜேக்ஸுடன் ஜோடி சேர்ந்த சாம் கர்ரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அவருக்கு துணையாக வில் ஜேக்ஸும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 64 ரன்களில் வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சாம் கர்ரனும் 69 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய சுனில் நரைனும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சர்ரே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களைச் சேர்த்தனர்.
அதன்பின் இமாலய இலக்கை துரத்திய ஹாம்ஷையர் அணியில் நிக் கப்பின்ஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பென் மொக்டர்மோட் 29, டாம் பிரெஸ்ட் 23 ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் சாம் கர்ரனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 18.5 ஓவர்களிலேயே ஹாம்ஷையர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அபாரமாக பந்துவீசிய சாம் கர்ரன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் சர்ரே அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹாம்ஷையர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.