WPL 2023: மிரட்டிய அலிசா ஹீலி; ஆர்சிபியை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!

Updated: Fri, Mar 10 2023 22:45 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி, யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இப்போட்டியில் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த சோபி டிவைன் - எல்லிஸ் பெர்ரி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோபி டிவைன் 36 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த எல்லிஸ் பெர்ரி அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து வந்த கனிகா, ஹீதர் நைட், ஸ்ரெயங்கா, ரிச்சா கோஷ் என அதிரடி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின்  களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானர். யுபி வாரியர்ஸ் தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - தேவிகா வைத்யா இணை அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வைத்யா நிதானமாக விளையாடிய ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, அலிசா ஹீலி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனார். 

அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அலிசா ஹீலி ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்சர் என 96 ரன்களையும், தேவிகா வைத்யா 31 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 13 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதேசமயம் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை