16 வருடமாக ஆர்சிபியின் கதை இதுதான் - அம்பத்தி ராயுடு விமர்சனம்!

Updated: Wed, Apr 03 2024 20:55 IST
16 வருடமாக ஆர்சிபியின் கதை இதுதான் - அம்பத்தி ராயுடு விமர்சனம்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் விளையாடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்விகள் என சந்தித்து புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீசனில் பல்வேறு நட்சத்திர வீரர்களைக் கொண்டு விளையாடிவரும் ஆர்சிபி அணியானது இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனிலாவது அந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இத்தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் அந்த அணி மூன்று தோல்விகளைத் தழுவியதுடன் அந்த அணி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிலும் நடப்பு சீசனில் அந்த அணியின் விராட் கோலி தனியாளாக போராடிவரும் நிலையில், மற்ற நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அதிலும் குறிப்பாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் பெரும்பாலான வீரர்கள் பேட்டிங்கில் சொதபியதே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் காலம் காலமாக அழுத்தமான சூழ்நிலைகளில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை என்று அம்பாத்தி ராயுடு குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்கள் எப்போதும் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அணியின் நட்சத்திர வீரர்களாக போற்றப்படுபவர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்துவருகின்றனர். இப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் அவர்களுக்கு யார் பேட்டிங் செய்தார் என்பதை பாருங்கள். இளம் இந்திய வீரர்கள் மற்றும் தினேஷ் கார்த்திக்.

ஆனால் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய பெரிய பெயரைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள்தான் அழுத்தத்தை ஏற்க வேண்டும். ஆனால் அவர்களோ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஓய்வறையில் இருந்து போட்டியை பார்த்துச் செல்கின்றனர்.  மஹிபால் லோம்ரோர் இம்பாக்ட் வீரராக களமிறங்கி 230 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தினால்தான் ஒரு போட்டியாவது ஆர்சிபி வென்றிருக்கிறது.

அழுத்தமான சூழ்நிலைகளில் பெரிய வீரர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். 16 வருடமாக இதுதான் ஆர்சிபியின் கதை. பவர்பிளேவில் எளிதாக ரன்களை அடிக்க முடியும். மூத்த வீரர்கள் அங்கு களமிறங்கி ரன்களை அடிப்பது பெரிய விஷயமில்லை. பிரபல வீரர்கள் அனைவரும் கேக்கில் உள்ள க்ரீமை மட்டும் சாப்பிட்டுவிட்டு செல்வது போல் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்கள். அதனால்தான் ஆர்சிபி இன்று வரை ஐபிஎல் தொடரை வெல்லவில்லை.” என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை