அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!

Updated: Thu, Jul 18 2024 14:01 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை. 

அதிலும் ஷிவம் தூபே போன்ற வீரர்கள் தொடர்ந்து சோபிக்க தவறிய பட்சத்திலும் அவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டி வந்தன. இதனால் இத்தொடரின் போது தூபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. ஆனாலும் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 

அதிலும் கடைசி டி20 போட்டியில் அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றினார். இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்து வரவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர் இளம் வயதை கடந்து விட்டார். இளம் வீரர்கள் தான் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக அசத்துவார்கள். எனவே அவர்கள் தான் இந்திய அணிக்கு அதிகம் தேவை.

 

மேலும் அம்முறையை விராட் கோலி தான் இந்திய அணிக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் விராட் கோலியின் வயது 35. எனவே சஞ்சு சாம்சன் வாய்ப்பை பெற வேண்டுமெனில் அபாரத்துக்கும் அதிகமான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். தற்போது அணியில் இருக்கும் அவர் அடுத்த 2 வருடங்கள் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனால் சஞ்சு சாம்சன் தற்போது தான் 29 வயத்தை எட்டியுள்ளார். மேற்கொண்டு அவர் 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் நிலையில் அவரது வயது 31ஆக மட்டுமே இருக்கும். ஆனால் தற்போதுள்ள இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் போன்ற வீரர்கள் 30 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இதனால் அமீத் மிஸ்ரா சஞ்சு சாம்சனின் வயதை மறந்து இத்தகைய கருத்துகளைத் தெரிவித்து வருவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை