IRE vs IND 1st T20I: மழையால் பாதித்த ஆட்டம்; இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டனர்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் கேப்டன் பும்ரா முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய பால்பிர்னி அடுத்த பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 9 ரன்களிலும், ஹாரி டெக்டர் 9 ரன்களிலும், ஜார்ஜ் டக்ரேல் ஒரு ரன்னிலும், மார்க் அதிர் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அயர்லாந்து அணி 59 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கர்டிஸ் காம்பேர் - பேரி மெக்கர்த்தி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் 39 ரன்களை எடுத்திருந்த கர்டிஸ் காம்பேர் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பேரி மெக்கர்த்தி 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் அதிரடியாக தொடங்கினாலும், கிரேக் யங் விசிய முதல் ஓவரில் 24 ரன்களை எடுத்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே திலக் வர்மாவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் அந்த ஓவர் முடிவதற்கு முன்னதாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 47 ரன்களைச் சேர்த்திருந்தது.
அதன்பின்னும் மழை தொடர்ந்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.