பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது பில் சால்ட் மற்றும் டேன் மௌஸ்லி ஆகியோரது அரைசதத்தின் மூலம், ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடியான் ஃபினிஷிங்கின் மூலமும் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்களையும், டேன் மௌஸ்லி 57 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் 19 ரன்னில் விகெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பிராண்டன் கிங் - கேசி கார்டி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் பிராண்டன் கிங் தனது மூன்றாவது சதத்தையும், கேசி கார்டி தனது முதல் சதத்தையும் விளாசியதுடன் 2ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் கிங் 102 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 128 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப், “இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைகிறேன். ஒரு எலைட் குழுவாக இருப்பதற்கான முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை தொடர்ந்து செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கேசி கார்டி எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு பெரும் சாதகமாக இருந்து வருகிறது. மேலும் அவர் கடினமாக உழைத்ததற்கான பலனை இன்று பெற்றுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என கடினமாக உழைத்து வருவது, எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. அதேசமயம் களத்தில் எனக்கும் அல்ஸாரி ஜோசப்பிற்கும் நடந்த கருத்து பரிமாற்றம் குறித்து ஏதும் பேச விரும்பவில்லை. அத்தகைய சூழ்நிலையில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் அணியின் பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.