சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
அதன்பின் இப்போட்டியில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 62 ரன்கள் சேர்த்த நிலையில் சர்ஃப்ராஸ் கான் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. அதிலும் குறிப்பாக சர்ஃப்ராஸ் கான் தனது அறிமுக போட்டியில் விளையாடியதை நேரில் கண்ட அவரது தந்தை நௌஷத் கான் கண்கலங்கிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும், சர்ஃபராஸின் தந்தையின் கடின உழைப்பையும், போராட்டத்தையும் பார்த்து அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் பிரபல இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் பெயரும் சேர்ந்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா நௌஷாத் கானால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன், மேலும் அவருக்கு புதிய மஹிந்திரா தார் காரை பரிசளிக்கவுள்ளதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளபதிவில், “தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு, தைரியம், பொறுமை, ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் என்ன உள்ளது? தன் குழந்தைக்கு உத்வேகம் தரும் பெற்றோராக இருப்பதற்காக, சர்ஃபராஸின் தந்தை நௌஷாத் கான் நான் கொடுக்கும் தார் காரை பரிசாக ஏற்றுக்கொண்டால் அது எனக்கு கிடைக்கும் பாக்கியம் மற்றும் கௌரவமாக கருதுவேன்” என பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இவரது பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.