இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Updated: Thu, Jul 27 2023 10:43 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளில் இரண்டில் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இங்கிலாந்தும், ஒரு போட்டி முடிவின்றியும் அமைந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், ஆஷஸ் தொடரையும் தக்கவைத்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வருகிற 30ஆம் தேதி 41ஆவது வயது பிறக்கிறது. இதுவரை 182 டெஸ்டில் விளையாடி 689 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டில் விளையாடி 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இன்றைய கடைசி டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதனை மறுத்துள்ள ஆண்டர்சன், “இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் தான் இருக்கிறேன். தொடர்ந்து எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஒவ்வொருவருக்கும் சறுக்கல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இது போன்ற பெரிய தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை