ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த அனில் கும்ப்ளே!

Updated: Fri, Feb 16 2024 22:09 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையு, அறிமுக வீரர் சஃப்ராஸ் கான் 62 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபாரமான சதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். 

இந்நிலையில் இந்த போட்டியில் ஸாக் கிரௌலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டை பதிவுசெய்து அசத்தியதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் படைத்தார். மேலும் இந்திய அணி தரப்பில் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவிற்கு பிறகு 500 விக்கெட்டுகளை வீழ்த்திர இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அனில் கும்ப்ளே 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “வாழ்த்துகள் அஸ்வின். உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 625, 630 விக்கெட்டுகளையாவது வீழ்த்த வேண்டு. அதற்குக் குறைவான விக்கெட்டுகளோடு உங்கள் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ரவிச்சந்திரன் அஸ்வின் 98 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கைப்பற்றி இப்பட்டியளில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் உலகளவில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியளில் அஸ்வின் 9ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை