ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க தயாராகி விட்டோம் – இலங்கை பயிற்சியாளர்!

Updated: Wed, Nov 01 2023 21:28 IST
ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க தயாராகி விட்டோம் – இலங்கை பயிற்சியாளர்! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் 6 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது.

இதனால் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ள இந்தியா அடுத்ததாக நாளை தங்களுடைய 7வது போட்டியில் இலங்கையை மும்பையில் எதிர்கொள்கிறது. இதுவரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய டாப் அணிகளை தோற்கடித்த இந்தியா இப்போட்டியிலும் இலங்கையை வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தற்சமயத்தில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் கண்டிப்பாக சொந்த மண்ணில் இலங்கையை விட இந்தியா வலுவான அணியாகவே கருதப்படுகிறது. அதை விட சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் மாபெரும் ஃபைனலில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 50 ரன்களுக்கு சுருட்டி தெறிக்க விட்ட இந்தியா அபார வெற்றி பெற்று 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை மறக்கவில்லை என்று இலங்கை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார் இருப்பினும் இம்முறை அதையே உத்வேகமாக எடுத்துக்கொண்டு இப்போட்டியில் தங்களுடைய அணி வீரர்கள் இந்தியாவை சாய்க்க போராடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆசிய கோப்பையில் சந்தித்த அந்த தோல்வி எங்களுடைய அணியில் சில உத்வேகத்தை சேர்க்கும் என்று நினைப்பதை விரும்புகிறேன். குறிப்பாக ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வி எங்களுடைய வீரர்களுக்கு இப்போட்டியில் போராடுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். 

அதே சமயம் இந்தியா சிறந்த அணி என்பதை நாங்கள் அறிவோம். இந்த தொடரில் அவர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். ஆனால் எங்களுடைய வீரர்கள் எதனால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை இந்தியாவுக்கு காண்பிப்பதற்கு இது நல்ல வாய்ப்பு என்று நான் கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை