ரஞ்சி கோப்பை 2022/23: தந்தையைப் போலவே அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜூன் டெண்டுல்கர்!

Updated: Wed, Dec 14 2022 15:02 IST
Image Source: Twitter

ரஞ்சிக் கோப்பை தொடர் நேற்று முதல், தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டியில் ராஜஸ்தான், கோவா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கோவா அணியின் தொடக்க வீரர்கள் அமோன்கர் 9, தேசாய் 27 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பிரபுதேசாய், ஸ்னேகல் கௌதன்கர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட ஆரம்பித்தனர். இதில் கௌதன்கர் 59 ரன்களில் ஆட்டமிழந்து, நடையைக் கட்டினார்.

அடுத்து களமிறங்கிய லாட் 17 ரன்களிலும், ஏக்நாத் கெர்கார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தப் பிறகு பிரபுதேசாய் உடன் அர்ஜுன் டெண்டுல்கர் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் படிப்படியாக உயர்ந்தது.

குறிப்பாக, அர்ஜுன் டெண்டுல்கர் தொடர்ந்து சிறப்பான முறையில் பந்துகளை எதிர்கொண்டு அசத்தினார். இதன்மூலம் அவர் தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 1988ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், இவரது தந்தையுமான சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்திருந்தார். அதேபோலவே இவரும் தற்போது அறிமுக போட்டியில் சதமடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தற்போது பிரபுதேசாய் 172 ரன்களை குவித்தும், அர்ஜுன் டெண்டுல்கர் 112 ரன்களை சேர்த்தும் களத்தில் இருக்கிறார்கள். விஜய் ஹசாரே, ரஞ்சிக் கோப்பை ஆகிய தொடர்களில், தொடர்ந்து பேட்டர்கள்தான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார்கள். ஆனால், பிசிசிஐக்கு தேவைப்பட்டது சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்தான். 

அதுவும், தற்போது இந்திய அணியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், இந்த ரஞ்சிக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருந்தது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளார். 

 

குறிப்பாக, இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பு. அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான இடமும் காலியாகத்தான் இருந்தது. இப்படி இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வீரராக இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர், எதிர்வரும் போட்டிகளிலும் ரன்களை குவிக்கும் பட்சத்தில், விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என கருதப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை