ஆஷஸ் 2023: மார்ஷ், லபுசாக்னே அரைசதம்; பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை 3 போட்டிகள் கொண்ட முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் உஸ்மான் கவாஜா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வார்னருடன் இணைந்த் மார்னஸ் லபுசாக்னே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வார்னர் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் ஸ்மித் 41 ரன்களுக்கும், அரைசதம் கடந்த லபுசாக்னே 51 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மிட்செல் ஸ்டார்க் 23 ரன்களுடனும், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும் கைபற்றினர்.