ஆஷஸ் 2023: சதமடித்து அசத்திய ஜோ ரூட்; 393 ரன்களில் டிக்ளர் செய்த இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இதில் பென் டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து போப் களமிறங்கினார். போப் மற்றும் கிராலி சிறப்பாக விளையாடினர். இருப்பினும், போப் 31 ரன்களில் நாதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து ஜோ ரூட் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஸாக் கிராலி அரைசதம் கடந்தார். அதன்பின் 61 ரன்கள் எடுத்திருந்த அவரும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 32 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த ஜானி பேர்ஸ்டோவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் 78 ரன்களைச் சேர்த்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த மொயீன் அலி 18 ரன்களுக்கும், ஸ்டூவர்ட் பிராட் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இவர் சதமடித்த கொஞ்சம் நேரத்திலேயே இங்கிலாந்து அணி 393 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது. இதில் ஜோ ரூட் 118 ரன்களையும், ஒல்லி ராபின்சன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். மொத்தம் 4 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் வார்னர் 8 ரன்களையும், கவாஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 379 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.