எங்கள் வீரர்கள் தொடர்ந்து பாஸ்பால் முறையில்தான் உறுதியாக விளையாடுவார்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
உலகக்கிரிக்கெட்டில் ஆட்டத்தின் சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களில் விவியன் ரிட்ச்சர்ஸ்க்கு பிறகு நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் முக்கியமானவர். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட இவர், தற்பொழுது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் அணி மிகவும் அடி வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் கொண்டுவரப்பட்ட பொழுது, புதிய பயிற்சியாளராக மெக்கல்லம் கொண்டுவரப்பட்டார். இவர்கள் இருவரின் கூட்டணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய பாணியை, ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.
அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல விளையாடுவது. இந்த அதிரடி முறைக்கு நியூசிலாந்து அணியில் மெக்கலமை செல்லமாகப் பாஸ் என்று அழைப்பதை வைத்து பாஸ்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாஸ்பால் முறையில் இங்கிலாந்து அணி குறிப்பிடத் தகுந்த வகையில் அதிரடியான வெற்றிகளை பெற்று, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களை புதிதாகச் சேர்த்திருக்கிறது. பேட்டிங் மட்டும் அல்லாமல் கிரிக்கெட்டில் சகல துறைகளிலும் இந்த அதிரடியான முறையையே இங்கிலாந்து பின்பற்றுகிறது.
இதே முறையில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை அணுகி வெற்றியின் விளிம்பு வரை வந்து பின்பு இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. இதனால் இவர்களின் பாஸ்பால் அணுகுமுறை குறித்து வெளியில் இருந்து விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. இரண்டாவது போட்டியிலும் இதே முறையில் இங்கிலாந்து விளையாடுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி உள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெக்கல்லம், “எங்கள் வீரர்கள் தொடர்ந்து பாஸ்பால் முறையில்தான் உறுதியாக விளையாடுவார்கள். இரண்டாவது ஆட்டத்தில் இன்னும் கொஞ்சம் நாங்கள் கடினமாக விளையாடுவோம். முதல் ஆட்டத்தில் நாங்கள் அற்புதமாக விளையாடினோம்.
ஆட்டம் எங்களுக்கு பக்கத்தில் சாதகமாக இருந்தது நாங்கள் அதை வெற்றியாக முடித்திருக்கலாம். நாங்கள் மிகுந்த நம்பிக்கை உடன் அடுத்த போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்திற்குச் செல்வோம். எதிரணி எதற்கெல்லாம் அழுத்தத்திற்கு போகுமோ, அந்த வாய்ப்பை எல்லாம் நாங்கள் பயன்படுத்தி வெல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.