ஆஷஸ் 2023: அதிரடியில் மிரட்டிய கிரௌலி, ரூட்; மிரண்டுபோன ஆஸ்திரேலியா!

Updated: Thu, Jul 20 2023 23:19 IST
Image Source: Google

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அனல் பறக்கும் இந்த தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், திரில்லிங்கான 3ஆவது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றியை ருசித்தன. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கவாஜா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் உஸ்மான் கவாஜா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னர் 32 ரன்களில் கேட்ச் ஆனார். 

அடுத்து களமிறங்கிய ஸ்டீவின் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்னஸ் அரை சதம் அடித்து 51 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 48 ரன்களும், கேமரூன் கிரீன் 16 ரன்களும், மிட்செல் மார்ஷ் 51 ரன்களும், அலெக்ஸ் காரே 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து இருந்தது. 

இதையடுத்து மிட்செல் ஸ்டார்க் 23 ரன்களும், கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் கம்மின்ஸ் 1 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ஹேசில்வுட் 4 ரன்களிலும் விரைவில் ஆட்டம் இழந்தனர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 90.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 36 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிரிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் பென் டக்கெட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸாக் கிரௌலி - மொயீன் அலி இணை பாஸ்பாலுக்கு(bazball) உரித்தான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இதில் மெயீன் அலி 54 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி சதமடித்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதில் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 21 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 189 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து 11 ரன்களில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவரைத் தொடர்ந்து மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்டும் 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து இணைந்த ஹாரி ப்ரூக் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 384 ரன்களைச் சேர்த்தது.

இதில் பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களையும், ஹாரி ப்ரூக் 14 ரன்களையும் சேர்த்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், கேமரூன் க்ரீன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 67 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.    
  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை