சிட்னி டெஸ்ட்: பெரும் போராட்டத்திற்கு பிறகு போட்டியை டிரா செய்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களையும், இங்கிலாந்து அணி 294 ரன்களையும் சேர்த்திருந்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலியா 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் இரு இன்னிங்ஸிலும் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தியிருந்தார்.
இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்டநேரமுடிவில் 30 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸாக் கிரௌலி 22 ரன்களுடனும், ஹாசிப் ஹமீத் 8 ரன்களுடனும் கடைசி நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஹமீத் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மாலன், ரூட் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிரௌலி 77 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவருடன் இணைந்து ஜானி பெர்ஸ்டோவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் இங்கிலாந்து அணி போட்டியை வெல்ல முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 60 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 41 ரன்னிலும், பட்லர் 11, மார்க் வுட் 0, ஜேக் லீச் 26 என வரிசையாக விக்கெட்டுக்கள் சரிந்தன.
இதனால் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் இறுதியில் நங்கூரம் போல நின்ற ஸ்டூவர்ட் பிராட் - ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தங்களது தடுப்பாட்டத்தின் மூலம் விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றனர்.
இதன்மூலம் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களைச் சேர்த்திருந்தது. மேலும் இங்கிலாந்திடம் கைவசம் ஒரு விக்கெட் இருந்ததினால் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்திய உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.