SMAT 2023: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஸ் சர்மா!
இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் ரயில்வேஸ் அணி அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் குவித்தது. ரயில்வேஸ் அணிக்கு 4வது பேட்ஸ்மேன் ஆக வந்த உபேந்திரா யாதவ் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள் குவித்தார். அடுத்து பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் வந்த அசுதோஸ் சர்மா அதிரடியாக 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் அரை சதம் அடித்தார்.
இதன்மூலம் யுவராஜ் சிங் முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்தில் அடித்திருந்த அதிவேக அரை சத சாதனையை முறியடித்தார். இப்போட்டியில் மொத்தம் 12 பந்துகள் சந்தித்த அவர் 53 ரன்கள் எடுத்தார். 25 வயதான இவர் மத்திய பிரதேச அணிக்காக ஆரம்பத்தில் விளையாடினார். தற்பொழுது ரயில்வே அணிக்காக விளையாடி வருகிறார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அருணாச்சல பிரதேஷ அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரயில்வே அணி தரப்பில் சுஷீல் குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ரயில்வே அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேஷ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.