ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!
உலகக் கோப்பைக்கு முன்பாக பயிற்சி பெறும் விதமாக, ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, இரு அணிகளுக்கும் இடையேயான இன்று இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரது சதம், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியவரின் அதிரடி அரை சதங்களால் 399 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கியது. இரண்டாவது ஓவரில் மேத்யூ ஷார்ட் மற்றும் ஸ்மித் இருவரையும் அடுத்தடுத்து பிரஷித் கிருஷ்ணா வெளியேற்றி வைத்தார்.
இந்த நிலையில் ஒன்பது ஓவர்கள் ஆட்டத்தில் வீசப்பட்டு இருக்க மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி 33 ஓவராகவும், இலக்கு 317 ரன்கள் ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் டேவிட் வார்னர் லபுசேன் உடன் களத்திற்கு வந்தார். ரன் நெருக்கடி இருந்த காரணத்தினால் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக டேவிட் வார்னர் விளையாட ஆரம்பித்தார்.
அவருக்கு அஸ்வின் பந்துவீச்சு ஒரு சிரமமாக இருந்த காரணத்தினால், அவர் முழு வலது கை பேட்ஸ்மேன் ஆக மாறி நின்று அஸ்வினை எதிர்கொண்டார். எதிர்கொண்டதோடு அந்த முறை பவுண்டரிக்கும் அடித்து அசத்தினார். இதைப் பார்த்த ஆஸ்திரேலியா டக் அவுட் மொத்தமும் சிரித்தது. ஆனால் அதே ஓவரில் எதிர்முனையில் இருந்த மார்னஸ் லபுஷாக்னே அஸ்வினின் பந்தை கணிக்க தவறி க்ளீன் போல்டாகினார்.
இதற்கு அடுத்து அடுத்த ஓவரில் மீண்டும் வந்த அஸ்வின் எல்பிடபிள்யு முறையில் டேவிட் வாரனரை ஆட்டம் இழக்க செய்து அனுப்பி வைத்தார். இதில் சுவாரசிய விஷயம் இது மட்டும் கிடையாது. அந்தப் பந்து டேவிட் வார்னர் பேட்டில் கொஞ்சம் உரசி இருந்தது. ஆனால் வார்னர் அப்பீல் செய்யாமல் வெளியேறிவிட்டார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.