ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இதன்மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 122 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து சத்தியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து தொடரில் சிறபபான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 5 இடங்கள் முன்னேறி, 6ஆம் இடத்தையும், இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தையும் பிடித்டுள்ளனர். நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின் தங்கி 9ஆம் இடத்தில் நீடித்து வருகிறார்.
இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் டாப் 10 இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர். அதேபோல் இந்த பட்டியலின் முதலிடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும், மூன்றாம் இடத்தை பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாமும் பிடித்துள்ளனர்.
மேலும் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி மாற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
அதன்படி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 870 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட் 847 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 847 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் பின்தங்கி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் மற்றொரு இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறார்.
அதேபோல் டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் நீடித்து வருகின்றனர். அதற்கடுத்தடுத்த இடங்களில் ஷாகிப் அல் ஹசன், ஜோ ரூட், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் உள்ளனர். இப்பட்டியலின் 6ஆவது இடத்தில் இந்திய வீரர் அக்ஸர் படேல் உள்ளார்.