அஸ்வினை எதிர்கொள்ளும் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் - அனில் கும்ப்ளே!

Updated: Tue, Jul 18 2023 22:38 IST
அஸ்வினை எதிர்கொள்ளும் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் - அனில் கும்ப்ளே! (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை முடித்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட், இரண்டாவது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட் என வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமாக விளையாடியது. 

இந்திய அணி முதல் இன்னிங்சில் 421 ரன்கள் அடித்திருந்ததால், கடைசியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்களை கைப்பற்றினார். 34 முறை டெஸ்ட் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் எட்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 பிளஸ் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அனில் கும்ப்ளேவின் பல சாதனைகளை முறியடித்தும் நெருங்கியும் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், அனைத்துவித கிரிக்கெட்டில் சேர்த்து மொத்தம் 709 சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர்கள் மத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டிப் பேசிய அணில் கும்ப்ளே, அஸ்வின் எப்படி இவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்? என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணி பேட்ஸ்மேன் மூளையில் சென்று விளையாடுகிறார். திறமை ஒரு பக்கம் இருந்தாலும், பேட்ஸ்மேன்களிடம் அழுத்தத்தை கடத்த வேண்டும். அதை அஸ்வின் மிகச்சிறப்பாக செய்கிறார். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் அஸ்வினை எதிர்கொள்ளும் பொழுது அழுத்தத்துடன் ஆடுவதை நம்மால் காண முடிகிறது.

குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்கள் அஸ்வினை எதிர்கொள்ளும் பொழுது கூடுதல் அழுத்தத்தை உணர்கின்றனர். பந்து வெளியே செல்லும் என்று எதிர்பார்த்திருக்கும் பொழுது நேராக வந்து அழுத்தத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு பந்தில் தான் சந்தர்ப்பால் ஆட்டம் இழந்து வெளியேறினார்” என்று பாராட்டினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை