ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது இலங்கை!

Updated: Tue, Sep 06 2022 23:20 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. 

சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கையும், பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. ஃபைனலுக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி ஆடிவருகிறது.

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங்  ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்  கேஎல் ராகுல் 6 ரன்களுக்கு தீக்‌ஷனாவின் பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி ரன்னே அடிக்காமல் மதுஷங்காவின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஆனால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின் அதிரடியை மேலும் கூட்டிய ரோஹித் சர்மா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 41 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். 

நன்றாக ஆடிய சூர்யகுமாரும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா ஆகிய மூவரும் மீண்டும் மிடில் ஆர்டரில் சொதப்ப, கடைசி ஓவரில் அஸ்வின் சிக்ஸர் அடித்து முடிக்க, 20 ஓவரில் 173 ரன்கள் அடித்த இந்திய அணி, 174 ரன்கள் என்ற இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

பின் 52 ரன்களில் பதும் நிஷங்கா விக்கெட்டை இழக்க, 57 ரன்களில் குசால் மெண்டீஸும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா, தனுஷ்கா குணத்திலகா ஆகியோரும் சொற்ப ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்‌ஷா - தசுன் ஷானகா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சில பவுண்டரிகளை அடித்தனர். 

இறுதி ஓவரில் இலங்கை அணி வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார். இறுதியில் இலங்கை அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை