உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரசிகர்களிடன் மன்னிப்பு கோரிய தசுன் ஷனகா!

Updated: Sun, Sep 17 2023 21:34 IST
உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரசிகர்களிடன் மன்னிப்பு கோரிய தசுன் ஷனகா! (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. அதன்படி இன்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 50 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.அதனை தொடர்ந்து 51 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 6.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இலங்கை அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் பலம் வாய்ந்த பாகிஸ்தான அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. மேலும் நடப்பு ஆசிய சாம்பியனாகவும் இருந்தது. எனவே இலங்கை அணியினர் மற்றும் அவர்களது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பாக இருந்தனர். ஆனால் இப்படிப்பட்ட ஒரு தோல்வி அவர்களை மிகுந்த காயப்படுத்தி இருக்கிறது.

இலங்கை அணியின் பெரும்பாலான ரசிகர்கள் எப்படியும் தங்கள் அணி தோற்றாலும் கூட இந்திய அணிக்கு எதிராக மிக நல்ல போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். சமூக வலைதளங்களில் அவர்களது மீம்ஸ்கள் மிக வைரலாக சென்று கொண்டிருந்தது. ஆனால் இது இந்திய அணியின் ரசிகர்களை எதிர்பார்க்காத ஒரு போட்டியாக அமைந்த விதத்தில், இலங்கை கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த அங்கங்களும் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, “சிராஜ் பந்துவீச்சுக்கே எல்லாப் பெருமையும் சேரும். பேட்டர்களுக்கு இது ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் மேகமூட்டமான சூழ்நிலை பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது. இது மிக நிச்சயமாகக் கடினமான நாள். நாங்கள் இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலாக இருந்திருக்க வேண்டும்.

இந்தத் தொடரில் எங்கள் அணியில் ஆட்டத்தின் நடுப்பகுதியில் குசல் மெண்டிஸ் மற்றும் சதிரா இருவரும் பேட்டிங் செய்தது, சரித் அசலங்கா அழுத்தத்தை கையாண்ட விதம், மற்றும் இளம் வீரர்கள் ஆகியோர்கள் செயல்பட்டது எங்களுக்கு நேர்மறையான விஷயமாக அமைந்திருக்கிறது. வரும் உலக கோப்பையில் இவர்கள் எல்லாம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். 

ஐந்து முக்கிய வீரர்கள் இல்லாமல் நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இடத்தில் இருந்து பார்த்தால் இது ஒரு நல்ல முன்னேற்றம். கடைசியாக நான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். மேலும் இந்திய அணியின் கிரிக்கெட் பிராண்டுக்கு அவர்களை வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை