முகமது நபி எங்களிடமிருந்து ஆட்டத்தை தட்டிசென்றார் - தசுன் ஷனகா!
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியானது நேற்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவித்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 92 ரன்களைடையும், பதும் நிசங்கா 41 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 37.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதன் காரணமாக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் ஒரு பந்துக்கு 3 ரன்கள் தேவை என்கிற நிலையில் கைவசம் இருந்த இரண்டு விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி நூலிழையில் இந்த போட்டியை தவறவிட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, “உண்மையிலேயே இந்த போட்டி எங்களுக்கு கடினமாக இருந்தது. இந்த இலக்கினை வைத்து நாங்கள் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்துவது சவாலாக இருந்தது. இந்த போட்டியில் மெண்டிஸ் மற்றும் அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் எங்களது வீரர்கள் இன்னும் போதிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. தீக்ஷனா மற்றும் வெல்லாலகே ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
மேலும் எங்களது வெற்றிக்கான கதவை திறந்து விட்டவர் ரஜிதா என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு முக்கியமான நேரத்தில் அவர் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நேரத்தில் அவர் ஆடியதை பார்க்கும்போது எங்களிடமிருந்து போட்டியை பறித்துச் சென்று விட்டார் என்று நினைத்து விட்டேன்” என கூறியுள்ளார்.