எல்எல்சி 2023: தரங்கா, தில்சன் அதிரடியில் கோப்பையை வென்றது ஆசிய லயன்ஸ்!
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தியா மகாராஜாஸ், ஆசியா லயன்ஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் கலந்துகொண்டு ஆடிய தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் ஆசியா லயன்ஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தோஹாவில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற உலக ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய உலக ஜெயிண்ட்ஸ் அணியின் டாப் 3 வீரர்களான வான் விக்(0), சிம்மன்ஸ்(17), ஷேன் வாட்சன் (0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். 4ஆம் வரிசையில் இறங்கிய ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் அதிரடியாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். 4ஆவது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து நிதானமாக பேட்டிங் ஆடிய ரோஸ் டெய்லர் 33 பந்தில் 32 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார்.
கிரிக்கெட் ஆடிய காலத்தில் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு அபாரமான பங்களிப்பு செய்தவர் ஜாக் காலிஸ். 47 வயதிலும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த காலிஸ், 54 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார். ஜாக் காலிஸின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 147 ரன்கள் அடித்த உலக ஜெயிண்ட்ஸ் அணி, 148 ரன்கள் என்ற இலக்கை ஆசியா லயன்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆசிய லயன்ஸ் அணிக்கு உபுல் தரங்கா - தில்சன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 115 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 57 ரன்களில் உபுல் தரங்கா ஆட்டமிழக்க, 58 ரன்களுக்கு தில்சனும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து வந்த அப்துல் ரஸாக்கும் 3 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ஆசிய லையன்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டிய் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.