Asian Games 2023: டி20 கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்தும், தகர்த்தும் நேபாள் அணி அசத்தல்!

Updated: Wed, Sep 27 2023 12:05 IST
Image Source: Google

தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு கிரிக்கெட் அணிகளை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலில் நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

அதில் இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் மங்கோலியாவை நேபாள் எதிர்கொண்டது. குறிப்பாக மங்கோலியா முதல் முறையாக இந்த போட்டியில் தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ளது. அதன் காரணமாக அந்த அணியின் 11 வீரர்களும் இந்த போட்டியில் தான் அறிமுகமான நிலையில் டாஸ் வென்ற மங்கோலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. 

இதைத் தொடர்ந்து களமிறங்கிய நேபாள் அணிக்கு கவுசல் புர்டெல் 19 ஆசிப் சேக் 16 என துவங்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த குசல் மல்லா மற்றும் கேப்டன் ரோஹித் பவுடேல் ஆகியோர் மங்கோலியா பவுலர்களை கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். போதாகுறைக்கு போட்டி நடைபெற்ற மைதானம் மிகவும் சிறியதாக இருந்ததை பயன்படுத்திய இந்த ஜோடி வெறித்தனமாக விளையாடி 3ஆவது விக்கெட்டுக்கு 194 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினார்கள். 

அதில் 34 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட குசல் மல்லா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2017இல் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முறையே இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக தலா 35 பந்துகளில் 100 ரன்கள் தொட்டதே முந்தைய சாதனையாகும். மறுபுறம் கேப்டன் பவுடேல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 61 (27) ரன்கள் விளாசி அவுட்டானார். 

ஆனால் அடுத்ததாக வந்த திபேந்திரா ஆரி மங்கோலிய பவுலர்கள் கலங்கும் அளவுக்கு 8 சிக்ஸர்களை விளாசி 9 பந்துகளில் 50 ரன்கள் கடந்து மொத்தம் 52* (10) ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமாக அரை சதமடித்து வீரர் என்ற யுவராஜ் சிங் (12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007) சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார். 

மறுபுறம் குசல் மல்லா 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 137* (50) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 314/3 ரன்கள் எடுத்த நேபாள் 300 ரன்கள் குவித்த அணியாகவும் அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் இரட்டை உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2019இல் அயர்லாந்துக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் 278/3 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். 

இதைத் தொடர்ந்து 315 ரன்கள் துரத்திய மங்கோலியாவை 13.1 ஓவரில் 41 ரன்களுக்கு சுருட்டி 273 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நேபாள் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலக சாதனை படைத்தது.இதற்கு முன் 2019இல் துருக்கிக்கு எதிராக சீசெஸ் அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். 

இந்தப் போட்டியில் நேபாள் அணி செய்துள்ள உலக சாதனைகள் :

  • டி20 கிரிக்கெட்டில் முதல் அணியாக 300 ரன்களை தொட்டது.
  • டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களாக 314 ரன்களை பதிவு செய்தது.
  • டி20 கிரிக்கெட்டில் 34 பந்துகளில் அதிவேக சதம் குசால் மல்லா.
  • டி20 கிரிக்கெட்டில் திபேந்திர சிங் ஆரே 9 பந்துகளில் அதிவேக அரைசதம்.
  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் என 26 சிக்ஸர்கள் அடித்தது.
  • டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் ஜெயித்தது 273 ரன்கள்.
  • தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்தது.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை