AUS vs PAK, 1st Test: முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி; பாகிஸ்தான் தடுமாற்றம்!

Updated: Fri, Dec 15 2023 19:27 IST
AUS vs PAK, 1st Test: முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி; பாகிஸ்தான் தடுமாற்றம்! (Image Source: Google)

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளிலேயே அரை சதமடித்தார். அவருடன் மறுபுறம் சற்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய உஸ்மான் கவஜா 126 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து 41 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஷாக்னேவும் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26ஆவது சதத்தை அடித்தார். அவருடன் எதிர்புறம் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 40 ரன்களிலும் அவுட்டானார்கள்.அடுத்த சில ஓவர்களிலேயே இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கேரி 34 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 15 பவுண்டரி, ஒரு சிக்சர் என 90 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அமர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் அடித்த நிலையில் அப்துல்லா ஷபீக் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் தனது பங்குக்கு 30 ரன்கள் அடித்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 53 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து நிதானமாக ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 38 ரன்களிலும், குர்ரம் ஷாஜாத் 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் லையன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை