பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். பின் 38 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வார்னரும், 42 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணையும் நிதான ஆட்டத்தை கையாண்டனர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறுது நேரம் தாமதமானது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இருப்பினும் மறுபக்கம் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, டிராவிஸ் ஹெட்டும் விக்கெட் இழப்பை தடுத்தார். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்துள்ளது. இதில் லபுஷாக்னே 44 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி, அமர் ஜமால், அகா சல்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.