AUS vs PAK, 2nd test: பாட் கம்மின்ஸ் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Fri, Dec 29 2023 13:20 IST
AUS vs PAK, 2nd test: பாட் கம்மின்ஸ் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா! (Image Source: Google)

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது  டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் 62 ரன்களையும், ஷான் மசூத் 54 ரன்களையும் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

இருந்த போதிலும் பாபர் அசாம் , சாத் ஷஹீல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த அமிர் ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 6 ரன்களில், டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றியும் என மிர் ஹம்ஸா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதானால் ஆஸ்திரேலிய அணி 16 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் - மிட்செல் மார்ஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதில் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அரைசதம் அடித்தார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, 50 ரன்களில் ஸ்மித்தும் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து 241 ரன்கள் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 262 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி, மிர் ஹம்சா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 12 ரன்களிலும், அப்துல்லா ஷஃபீக் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் - பாபர் ஆசாம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் ஷான் மசூத் அரைசதம் கடந்தார். பின் 60 ரன்களில் மசூத் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சௌத் சகீல் 24 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 35 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அரைசதம் கடந்த ஆகா சல்மானும் 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய அமர் ஜமால், ஷாஹீன் அஃப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நளை ஜனவரி 03ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை