அரைசதம் விளாசிய முகமது ரிஸ்வான்; சாதனை பட்டியளில் இடம்!

Updated: Wed, Jan 03 2024 12:17 IST
அரைசதம் விளாசிய முகமது ரிஸ்வான்; சாதனை பட்டியளில் இடம்! (Image Source: Google)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா சஃபீக் மற்றும் சயீம் அயூப் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினார். 

தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் பாபர் அசாம் 26 ரன்களில் எடுத்து சிறப்பாக விளையாடிய போது, திடீரென கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  அதன்பின் வந்த சௌத் சகீலும் 5 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 75 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் ஷான் மசூத் - ரிஸ்வான் கூட்டணி இணைந்து பாகிஸ்தான் அணியை மீட்க போராடியது. 

இதில் ஷான் மசூத் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அனைத்து பொறுப்புகளும் ரிஸ்வான் தலையில் விழுந்தது. இதன்பின் அதிரடிக்கு திரும்பிய ரிஸ்வான், ஆஸ்திரேலியா பவுலர்களை சிதறடித்தார். சரியான பந்துகளை தேர்வு செய்து பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். சிறப்பாக விளையாடிய அவர் 74 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது ரிஸ்வான் அடிக்கும் 9ஆவது அரைசதம் இதுவாகும். இதன்பின் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றிய அவர், பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இதனால் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 103 பந்துகளில் 2 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் சேனா(SENA) நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் முகமது ரிஸ்வான் அடிக்கும் 7ஆவது அரைசதம் இது. இதன் மூலமாக ஆசிய விக்கெட் கீப்பர்களில் சேனா நாடுகளில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிஸ்வான் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

 

இந்த பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 60 இன்னிங்ஸில் 13 அரைசதங்களை விளாசி முதலிடத்திலும், இந்திய வீரர் ரிஷப் பந்த் 39 இன்னிங்ஸ்களில் 8 அரைசதங்களுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 15 இன்னிங்ஸில் 7 அரைசதங்களை விளாசி மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை