AUS vs SA, 2nd ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Fri, Aug 22 2025 19:46 IST
Image Source: IANS

AUS vs SA, 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மெக்கேவில் உள்ள கிரேட் பேரியர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். 

இதில் பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் ஸோர்ஸி 38 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதமும் கடந்தார். பின் இந்த போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ பிரீட்ஸ்கி 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 88 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 277 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், சேவியார் பார்ட்லெட், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இதில் டிராவிஸ் 6, மாரனஸ் லபுஷாக்னே ஒரு ரன், மிட்செல் மார்ஷ் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - ஜோஷ் இங்கிலிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜோஷ் இங்கிலிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் கேமரூன் க்ரீன் 35 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 13 ரன்களுக்கு, ஆரோன் ஹார்டி 10 ரன்களுக்கும், ஸேவியர் பார்ட்லெட் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அணியின் நம்பிக்கையாக இருந்த ஜோஷ் இங்கிலிஸும் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 87 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களும் சோபிக்க தவறினர். 

Also Read: LIVE Cricket Score

இதனால் ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் மற்றும் செனுரன் முத்துசாமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 84 ரன்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::