வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது, இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள கம்மின்ஸ், கேமரூன் க்ரீன் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்.
முன்னதாக கேமரூன் க்ரீன் கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து அவர் அத்தொடரில் இருந்தும் விலகினார். மேற்கொண்டு காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேமரூன் க்ரீன், இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியதுடன், முக்கிய தொடர்களையும் தவறவிட்டார்.
இந்நிலையில் அவர் தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதுடன், இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இதன் காரணமாகவே அவர் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து இந்த அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் தொடரும் நிலையில், அணியின் துணைக்கேப்டன் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இளம் அதிரடி வீரர் சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ், பியூ வெப்ஸ்டர் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் உஸ்மாஅன் கவாஜாவுடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இந்த அணியில் கூடிதல் வீரராக அறிமுக வீரர் பிராண்டன் டக்கெட் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.